நிறுவனத்தைப் பற்றி

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆய்வு நிறுவனம். இஃது உலகளவில் செம்மொழித் தமிழுக்கென்று நிறுவப்பெற்றுள்ள உயராய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் 2008 மே 19 முதல் சென்னையில் தமிழக அரசு வழங்கியுள்ள பாலாறு இல்லக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இதற்கு முன் 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் என்னும் பெயரில் செயற்பட்டுவந்தது. மாண்புமிகு தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்ட உயர்நிலைக்குழு (ஐம்பெருங்குழு, எண்பேராயம்) இந்நிறுவனத்தின் திட்டங்களையும் செயற்பாடுகளையும் நெறிப்படுத்துகிறது. தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் உலகுணரச் செய்யும் வகையில் பல்வேறு பணிகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அறிஞர்களின் ஒருமித்த கருத்திற்கிணங்கச் செம்மொழித் தமிழின் திட்டப் பணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. தொன்மைக் காலம் தொடங்கிக் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையுள்ள செம்மொழித் தமிழை மையப்படுத்தி முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் நன்கு புலப்படுத்தும் நோக்கில், உடனடியாகச் செயற்படுத்த வேண்டிய பத்து முதன்மைத் திட்டப்பணிகள் வகுக்கப்பெற்றுள்ளன.

  • பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்பு
  • பழந்தமிழ் நூல்களை மொழிபெயர்த்தல்
  • வரலாற்று முறைத் தமிழ் இலக்கணம் வகுத்தல்
  • தமிழின் தொன்மை – பன்முக ஆய்வு
  • தமிழ் வழக்காறுகள் ஆய்வு
  • தமிழ், திராவிட, பிற மொழிக் குடும்பங்கள் – ஒப்பாய்வு
  • பழந்தமிழ் ஆய்வுக்கான மின் நூலகம்
  • இணையவழிச் செம்மொழித் தமிழ்க் கல்வி
  • பழந்தமிழ் நூல்களுக்கான தரவகம்
  • செம்மொழித் தமிழ்க் காட்சிக் குறும்படங்கள்

மேலும் >> www.cict.in

1